மட்டு.கரடியனாறு பொலிஸ் பிரிவில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த வைரமுத்து நல்லரத்தினம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 11.00 மணியளவில், வயலில் இருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, இவரை யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வழியில் உயிரிழந்தார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.