வீதி விபத்துக்களினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வீதி விபத்து தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விபத்துகள் ஏற்படாமல் தடுக்கக்கூடியவை எனவும் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பயனளிக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியுடன் முன்நோக்கிச் செல்லும்போது, விபத்துகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக விபத்துகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்படும் தாக்கங்களை குறைக்க முடியுமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.