
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்!
-மன்னார் நிருபர்-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 30 மீனவர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நேற்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு , திணைக்கள அதிகாரிகள் பதிவு நடவடிக்கைகளுக்கு பின்னர் நேற்று மாலை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் .
குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
