ஜெனீவாவில் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை குறித்து விவாதம் நடத்த தீர்மானம்

2009 இல் போர் முடிவடைந்த பின்னர், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம், இலங்கையின் போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த பல தீர்மானங்களை, முன்னைய அரசாங்கங்கள் உரிய முறையில் கையாளவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற 60வது மனித உரிமைகள் பேரவை அமர்வு மற்றும் அதன் முடிவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முன்னைய எந்த அரசாங்கமும், தேசியப் பிரச்சினையை முறையாக நிர்வகிக்காமையே, ஜெனீவாவில் நடக்கும் இந்தச் செயல்பாட்டிற்கான அடிப்படைக் காரணமாகும் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கெடுப்பில் தோல்வியடைவது உறுதி என்று தெரிந்திருந்தும், முன்னைய அரசாங்க உறுப்பினர்கள் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடித்ததாகவும் வாக்கெடுப்பை கோருவது ஏற்கனவே சர்வதேசமயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினையை உள்நாட்டுத் தளத்திற்குக் கொண்டு வந்து தீர்ப்பதற்கான வாய்ப்பை அடைத்து விடுமெனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் தூதரும் நிரந்தர பிரதிநிதியுமானவர் தெரிவித்த கருத்துக்களை வரவேற்ற போதிலும், இலங்கை ஏன் பேரவையில் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை? என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

மேலும், வெளியுறவு அமைச்சரின் அறிக்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்றும், அமைச்சர் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.

இதற்கிடையில், இழப்பீட்டு அலுவலகத்தின் அமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பினார், அதன் உறுப்பினராகும் தகைமை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே உள்ளதா? அல்லது புதிய நியமனங்கள் வழங்கப்படுமா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இந்த விஷயம் ஒரு தனி அமைப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது, ‘ உங்கள் கேள்வியை நான் அங்கு தெரியப்படுத்துகிறேன், நீங்கள் அங்கிருந்து இறுதி பதிலைப் பெறலாம்’, என தெரிவித்தார்.

இலங்கை வாக்கெடுப்பு கோருவதில் இருந்து பின்வாங்கக்கூடாது, என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஜெனீவாவில் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலகே முன்மொழிந்தார், அதற்கு வெளியுறவு அமைச்சர் ஒப்புக்கொண்டார்.