மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வில் குண்டு தாக்குதல்கள்

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர்.

தேசிய விடுமுறை நாளான திங்கட்கிழமை மாலை புத்த மத தாடிங்யுட் திருவிழா நிகழ்வில் பங்கேற்க சாங் யூ நகரத்தில் சுமார் 100 பேர் கூடியிருந்தபோது, மோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் ஒன்று கூட்டத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாக இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் பாதுகாப்புப் படையின் கீழ் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு இராணுவ ஆட்சிக் கொள்கைகளை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்தி நடத்தப்பட்ட போராட்டமாகவும் அமைந்தது.

2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் மியான்மர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த மோதலில் 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

திங்களன்று நடந்த கூட்டத்தின் போது, வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகவும், தங்கள் போராட்டத்தை விரைவாக முடிக்க முயன்றதாகவும் மக்கள் பாதுகாப்புப் படை அதிகாரி பிபிசி பர்மியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பாராமோட்டர்கள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே சம்பவ இடத்தை அடைந்தன.