இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 10 இலட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்
-யாழ் நிருபர்-
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட 250 கிலோ எடையுடைய கட்டைகள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட கடலட்டைகள் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிசார் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் – சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை இரவு கியூ பிரிவு பொலிசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்தி வந்தனர்.
இதனை கண்ட கியூ பிரிவு பொலிசார் கடல் அட்டைகளை பதப்படுத்திய கும்பலை மடக்கி பிடிப்பதற்காக சுற்றி வளைத்த நிலையில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் அங்கிருந்த மூவர் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணைகளின்போது, தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து சக்கர கோட்டை குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனில் பதப்படுத்தி பின்கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
ராமநாதபுரம் புறநகர் பகுதியில் கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


