கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் 17 வயதான தாயும் தந்தையும் கைது!

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரும் 17 வயதுடையவர்கள் எனவும் இருவரும் காதலித்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிசுவின் தாயான யுவதியின் காதலனின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட சிசுவின் தந்தையான இளைஞன் தனது காதலியின் வீட்டுக்கு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார்

அதன்பின்னர் குறித்த இளைஞன் தனது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன். உங்களுக்கு பெண் குழந்தை இல்லை தானே எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார்.

அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.

குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப்படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது.

இவ்விடயம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குழந்தையை பிரசவித்து இவ்வாறு வேறொருவருக்கு பொய் சொல்லி கொடுத்த தந்தையும் தாயுமான 17 வயதுடைய இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.