இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் காணி விடுவிப்பு

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 வருடமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் இரண்டு எக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 35 வருடமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாடசாலை காணி கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அமைச்சர் மற்றும் ராணுவத்தினரால் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது

இரண்டு ஏக்கர் கொண்ட பாடசாலை காணி பாடசாலையை அண்மித்த தனியார் காணிகளை சேர்த்து 1990 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் முகாமிட்டிருந்தன பின் இந்திய இராணுவம் வெளியேறியதை அடுத்து இலங்கை ராணுவத்தின் பாவனையில் இருந்து வந்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இராணுவ முகாமுக்குள் இருந்த தனியார் காணிகள், பாதை என்பன இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து பாடசாலை காணியை மட்டும் இராணுவம் தனது பயன்பாட்டில் வைத்திருந்தது . தேசிய மக்கள் சத்தி நாட்டை பொறுப்பேற்றதிலிருந்து வடக்கு கிழக்கில் இராணுவ பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றது

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறித்த பாடசாலை காணி இன்று இராணுவத்தினரால் அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துல்நெத்தி , பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அரசாங்க அதிபர் ஜே. அருள்ராஜ் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் J.S.P.W பல்லேகும்புர, 23வது காலாட்படை படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் G.P.Pகுணதிலக, மாகாண கல்வி பணிப்பாளர், பிரதேச செயலாளர், கல்குடா வலையக் கல்வி பணிப்பாளர், இராணுவத்தின் உயர் அதிகாரிகள் ,பிரதேச சபை உறுப்பினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .