
தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட 15 வயது மாணவன்!
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில், 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம், நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் குறித்த மாணவன், நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலை சென்று மாலை 5.00 மணியளவில் வீடு திரும்பியுள்ளார், அவரை 6 மணியளவில் அவரது வீட்டினருகே கண்டதாக பக்கத்து வீட்டினர் தெரிவிக்கின்றனர்.
காலை வேலைக்குச் சென்ற மாணவனின் தந்தை, மாலை 7 மணியளவில் வீடு திரும்பிய போது மகன் வீட்டிலிருக்கவில்லை, அதனைத்தொடர்ந்து தந்தை மகனை தேடியுள்ளார்.
ஊர் முழுவதும் மகனை தேடி அலைந்த தந்தை, மீண்டும் வீட்டிற்கு வந்து வீட்டினுள் தேடிய போது, சமையலறையின் பக்கத்தில் இருந்த இருட்டான மற்றொரு அறையில் சென்று பார்த்த போது, அங்கு தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை தந்தை கண்டுள்ளார்.
பிரதேசவாசிகள் உடனடியாக மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ் புஸ்ப்பகுமார உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவம் தொடர்பாக விசாரனைகளை ஆரம்பித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை ஹட்டன் பொலிஸ் நிலைய SOCO பிரிவினர், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சடலத்தை பார்வையிட்ட பின்னர், ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி வந்து நேரடியாக பார்வையிட்டு, அதனடிப்படையில் விசாரனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும், அதுவரை மஸ்கெலியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் இருப்பார்கள் எனவும், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ் .எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.
மேலதிக விசாரனைகளை மேற்கொண்ட பின்னர், மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணைகளை முன்னெடுக்க போவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவனின் தாய் கொழும்பு சென்று உள்ளதாகவும், மாணவனுக்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர் எனவும், உயிரிழந்த மாணவன் வீட்டில் கடைசி பிள்ளை எனவும் மாணவனின் தந்தை பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
நீதிவான் பார்வை இட்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார தெரிவித்தார்.
