முத்து மாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா

மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசணம் கவிஞர் முத்து மாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் நடாத்திய சிறுகதைப் போட்டிகளிலும் முதலிடம் பெற்ற சிறுகதைகளே இன்று ‘வேரை மறந்த விழுதுகள் சிறுகதை’ தொகுதியாக வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுசரணையை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியிருந்தது.

கறுவாக்கேணி முத்துமாதவன் ஒர் கவிஞனாக எழுத்தாளனாக பன்மைத்துவ ஆளுமைகளை தன்னகத்தே கொண்டு தமிழ் இலக்கிய வாரிசான இவர் 1970 ‘சுதந்திரன்’ பத்திரிகையிலும் பின்னர் ‘சுடர்’ சஞ்சிகையிலும் விடுதலை வேட்கை கொண்ட விடயங்களை எழுதி வந்தார்.

பின்னர் தேசிய பத்திரிகைகளிலும் சிறுகதை, கவிதைகளை எழுதியதோடு பல விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

இந் நூலானது முத்து மாதவனின் மூன்றாவது நூலாகும்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் மற்றும் கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் சிவநேசராசா மற்றும் பிரதேசத்தின் சமூக சேவையாளர்கள்,சமூ க மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .

அதிதிகள் யாவரும் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

மங்கள விளக்கேற்றலுடன் மௌன இறை வணக்கத்தினை தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து ஆசியுரை மற்றும் வரவேற்புரை என்பன இடம்பெற்று நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.

வரவேற்புரையை காண்டீபன் நிகழத்தினார் சிறப்புரையை உழைக்கும் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைப்பாளரும் ராவையா பத்திரிகையின் ஊடகவியலாளருமான நடராசா நிகழ்த்தினார்.

நூல் அறிமுகவுரையை தமிழ் ஆசிரிய ஆலோசகர் ஜெயரஞ்சித் நிகழ்த்தினார்.

நூல் ஆய்வினை கிரான் மத்திய கல்லூரி ஆசிரியர் பாரதி சாஜகான் நிகழ்த்தினார் நூலின் முதல் பிரதியினை த.சதானந்தன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் நூலாசிரியரினால் ஏற்புரை வழங்கப்பட்டு தவசுதனின் நன்றியுரையுடன் ‘வேரை மறந்த விழுதுகள்’  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா இனிதே நிறைவடைந்தது.