நுவரெலியா மாவட்டம் சாமிமலை மின்னா தோட்ட வீதியின் அவல நிலை

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்ப்பட்ட சாமிமலை மின்னா தோட்டத்திற்கு செல்லும் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதை பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகிறது.

குறித்த பாதையை சீர் செய்து தருவதாக கடந்த கால ஆட்சியாளர்களால் மூன்று முறை அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இன்று வரை பாதை சீர் செய்யப்படவில்லை.

மேலும் இறுதியாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக மலையக அமைச்சர் ஒருவரால் அடிக்கல் நாட்டப்பட்டு சீர் செய்யும் பணிகளுக்காக கொண்டு வரப்பட்ட கல் மணல் என்பன இரவோடு இரவாக மாற்றிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்படியாயின் குறித்த பாதைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி என்ன ஆனது. என்று இந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்காளர்கள் பாடசாலை பிள்ளைகள் கர்ப்பிணி தாய்மார்கள் நோயாளிகள் இந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது அன்றாட தேவைகளுக்காக சாமிமலை மற்றும் மஸ்கெலியா நகருக்கு குறித்த பாதையை கடந்தே செல்ல வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் கடுமையான வருத்தம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள் குறித்த நேரத்திற்கு கொண்டு செல்ல படாத நிலையில் பல துரதிர்ஷ்டவசமாக சம்பவங்களும் இடம்பெற்றது .

சில கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை பிரசவித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

இந்த பாதையை சீர் செய்து தரும்படி பல்வேறு போராட்டங்கள் நடாத்தப்பட்டு மலையக மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இன்று வரை தமக்கான உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தமக்கான உரிய தீர்வை தற்போதைய அரசாங்கம் பெற்று தர வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.