கரூர் உயிரிழப்பு 38 அதிகரிப்பு விஜய் இரங்கல் : முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் விரைகிறார் – படங்கள் இணைப்பு

தமிழ்நாடு – கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது சனநெரிசலில் சிக்குண்டு 38 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு விஜய் இரங்கல் தனது தெரிவித்துள்ளார்.

கரூரில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்திருந்துள்ளனர். 8 குழந்தைகள், 16 பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் 62 பேருக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கரூர் மருத்துவமனை எங்கும் மரண ஓலம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் சிகிச்சைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

கரூரில் நடந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். அதில், “அரசியல் கட்சியின் பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம் அடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த உடனே மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் விரைகிறார். அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க கரூர் வரவழைக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் உள்ள அனைத்து பணியார்களும் பணியில் உள்ளனர். கூடுதல் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, மத்திய அரசு கரூர் சம்பவம் தொடர்பாக அறிக்கை கேட்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் ரூ. 10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளதுடன், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனி விமானம் மூலம் திருச்சியில் இருந்து சென்னை வந்தார் விஜய். முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்துவிட்டு சென்ற விஜய், சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையிலும் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டார்.