இன்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைக்கு வாய்ப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கபோதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.