பேஸ்புக்கில் ஹா ஹா ரியாக்சன் போட்டதன் விளைவு : 20 வயது இளைஞன் கொலை!
இந்தியாவின் குஜராத்தின் ராஜ்கோட் நகரில், சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஹா ஹா ரியாக்சன் (laughing emoji) பயன்படுத்தியதற்காக ஏற்பட்ட சண்டையில், 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் (Prince Kumar) என்ற இளைஞரே கத்திக்குத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவர் குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தனது மூன்று உறவினர்களுடன் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிரின்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தன் குடும்பம் தொடர்பான ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். (அதாவது நான்கு மாதங்களுக்கு முன் உயிரிழந்த தனது தாத்தா ரூப்நாராயண் பிந்த் குறித்து ஒரு பதிவு போட்டார்) இதற்கு பிபின் குமார் ராஜேந்தர் கோண்ட் (Bipin Kumar Rajinder Gond) என்பவர் ஒரு ஹா ஹா ரியாக்சனை பதிலளித்தார்.
இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி, தொழிற்சாலைக்கு வெளியே பிரின்ஸ் ஒரு முச்சக்கரவண்டியில் அமர்ந்திருந்தபோது பிபின் அங்கு வந்து மேதலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மற்றொரு சந்தேகநபரான பிரிஜேஷ் கோண்ட் (Brijesh Gond) என்பவரும் பிரின்ஸைத் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார், இந்த மோதலின்போது, பிபின் என்பவர் பிரின்ஸின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார்.
பிரின்ஸின் முதுகில் 1.5 முதல் 2 அங்குலம் ஆழம் கொண்ட காயம் ஏற்பட்டது, உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் காயம் தீவிரமானதல்ல என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும், நான்கு நாட்களுக்குப் பிறகு பிரின்ஸின் நிலைமை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 22 ஆம் திகதி பிரின்ஸ் உயிரிழந்தார்.
இதனையடுத்து பிபின் குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், மற்றொரு சந்தேகநபரான பிரிஜேஷ் தலைமறைவாக உள்ளார், என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
