Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது திண்மக் கழிவு மீட்பு நிலையம் காத்தான்குடியில்!
Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணங்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்மக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றும் வசதிகளை வழங்குவதற்காக கழிவு மீட்பு மையங்களைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் கழிவு மீட்பு மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் முதல் நிகழ்ச்சித் திட்டமாக, 50.8 மில்லியன் ரூபா செலவில் காத்தான்குடி நகர சபையில் கழிவு மீட்பு மையத்தின் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
உக்காத குப்பைகள் உருவாகும் தலா 06 இடங்களில் மொத்தம் 54 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது அந்த இடங்களில் 25 இன் சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 03 ஆண்டுகளுக்குள் சுகாதாரக் குப்பைக் கிடங்குகளில் சேரும் கழிவுகளின் அளவை 30% குறைக்க சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக பங்கேற்பு மூலம் 3R எண்ணக்கருவை (Reduce, Reuse, Recycle) செயல்படுத்துதல், உருவாக்கப்படும் கழிவுகளின் அளவைக் குறைத்தல் மற்றும் முறையாகப் பிரிக்கப்பட்ட கழிவுகளை (பொலிதீன்/கண்ணாடி/ஏனையவை) சேகரித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களை வலுவூட்ட இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
Clean Sri Lanka’ செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபைகள், பிரதேச சபைத் தவிசாளர்கள் உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.