முதல் முறையாக சம்பள விடயம் சம்பந்தமாக தோட்ட பெண் தொழிலாளி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை தற்போதைய வாழ்வாதாரத்திற்கு அமைவாக அதிகரிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளியான மஸ்கெலிய_பிரவுன்சிவிக் தோட்டத்தை சேர்ந்த திருமதி பாலகிருஷ்ணன் தேவிகா மற்றும் இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் திருமதி மேனகா கந்தசாமி ஆகியோரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தற்போதைய வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில்,

பிரதிவாதிகளாக தொழில் ஆணையாளர் நாயகம்
தொழில் அமைச்சர் , தேயிலைக்கான சம்பள நிர்ணய சபையின் செயலாளர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த மனுவை வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்ற நீதியரசர்களால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது பெருந்தோட்ட நிறுவனங்களுடன் மேற்க் கொள்ளப்பட வேண்டிய கலந்துரையாடலை அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர் வரும் நவம்பர் மாதம் 20 ம் திகதிக்குள் இறுதி தீர்மானத்தை தொழில் அமைச்சர் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில் உரிய தீர்வு எட்டப்படாவிட்டால் அடுத்த வருடம் ஜனவரி 20 ம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.