
முத்து நகர் விவசாயிகள் 4ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரகம் தொடர்ந்து 4வது நாளாகவும் இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!
இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!,பொய்கள் வேண்டாம்,விவசாயிகளை இப்படியா நடாத்துவது போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம்,அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச் சத்தியக் கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நேற்று இடம்பெற்ற நிலையிலும் கூட தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
