
சுவிட்சர்லாந்தில் விபத்து : இரு ஓட்டுநர்களும் மதுபோதையில் ?
சுவிட்சர்லாந்து – ஓல்டன் அருகே வாங்கன் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் 41 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். பொலிசாரின் தகவல்களின்படி, இரு ஓட்டுநர்களும் மதுபோதையில் இருந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வியாழக்கிழமை, இரவு 8:45 மணியளவில் 31 வயது கார் ஓட்டுநர் ஒருவர் ஓல்டன் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 41 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கார் ஓட்டுநர் காயமின்றி தப்பினார். இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
பொலிசாரின் விசாரணையில், இரு ஓட்டுநர்களும் மது போதையில் வாகனங்களை ஓட்டியிருந்தமை மூச்சுப் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தின் காரணமாக ஓல்டனுக்கும் வாங்கனுக்கும் இடையிலான கிராமச் சாலை சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்துக்கு மூடப்பட வேண்டியிருந்தது.
