யாரிடமும் பஸ் நிலையம் கேட்கவில்லை : எந்த முடிவானாலும் தொழிற்சங்கத்துடன் பேசியே எடுப்போம் – இபோச வட பிரதி முகாமையாளர்

-அம்பாறை நிருபர்-

யாழ். நகரப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்து நிலையம் அமைத்து தருமாறு நாங்கள் யாரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என தெரிவித்த இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பிரதிப் பொது முகாமையாளர் எந்த முடிவானாலும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிய எடுக்க முடியும் என தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் துறைசார் அமைச்சர் விமல் ராட்நாயக்க தலைமையில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் வீதி விருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ் நகரை அபிவிருத்தி செய்வதாயின் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபை இலங்கையில் தனித்துவமான சேவையை வழங்கி வரும் நிலையில் யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நாமும் தனித்துவமான சேவையை வழங்கி வருகிறோம்.

நாங்கள் யாரிடமும் புதிய பஸ் நிலையம் வேணும் என கோரிக்கை முன்வைக்காத நிலையில் புதிய பேருந்து நிலையம் ஒன்றில் தனியாருடன் இணைந்து நெடுந்தூர போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாம் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிய நிலையில் அந்தக் கோரிக்கையை ஏற்க மாட்டோம் என முடிவு எட்டப்பட்டது என்றார்.

இதன் போது பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ். நகரத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து தரிப்பிடத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எனது கோரிக்கை அல்ல அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த துறைசார் அமைச்சர் விமல் ராட்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடக்கு போக்குவரத்து துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள இளங்குமரன் எம்பி தலைமையில் இலங்கை போக்குவரத்து சபை யுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.