கெட்டம்பே மேம்பால கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடிவு!

கொழும்பிலுள்ள கொஹுவல மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்கும், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கெட்டம்பே (Getambe) மேம்பால கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொஹுவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்கள், இலங்கையும் ஹங்கேரி அரசாங்கமும் கையெழுத்திட்ட நிதி ஒத்துழைப்பு உடன்படிக்கைகளின் கீழ் செயற்படுத்தப்பட்டன.

அந்த நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியினால் ஹங்கேரி எக்ஸிம் வங்கி நிதி வழங்குவதை நிறுத்தியதைத் தொடர்ந்து, கொஹுவல மேம்பாலம் ஒப்பந்தக்காரர்களின் நிதியுடன் நிறைவு செய்யப்பட்டு வாகனப் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், தாழ்வான வீதிகள் நிறைவுசெய்யப்படாத காரணத்தால் பாதசாரிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில், தாழ்வான வீதிகள் மேம்பாலத்தின் கட்டுமானமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தாழ்வான வீதிகளை தற்போதைய ஒப்பந்தக்காரர் மூலம் உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி நிறைவுசெய்யவும், கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.