பஸ்களின் கட்டாய தர நிலை செயற்பாடுகளுக்கு பஸ் சங்கங்கள் எதிர்ப்பு
நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தும் பயணத்தை ஆரம்பிக்க முன்னர் அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குப் பஸ்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முறையான ஆய்வுக்குப் பின்னரே அரசாங்கம் இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உரிய வழிமுறைகள் இல்லாமல் திட்டத்தைச் செயற்படுத்தினால், எதிர்காலத்தில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேநேரம் நீண்ட தூரப் பஸ்கள் இயக்கப்படுவதற்கு முன்னர் அடிப்படை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை அடுத்த மாத தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதல் கட்டமாக, கொழும்பிலுள்ள பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தை மையமாகக் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
மேலும் நீண்ட தூர சுற்றுலாப் பஸ்களும் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பஸ்கள், 48 மணி நேரத்துக்கு முன்னர் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.
இது தொடர்பான வழிமுறைகள் சுற்றறிக்கை மூலம் வெளியிடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
