வேலை செய்யும் இலங்கையர்களில் 42 சதவீதம் பேர் O/L சித்தியடையவில்லை!
அரச மற்றும் தனியார்த் துறைகளில் பணிபுரியும் இலங்கையர்களில் 42 சதவீதமானவர்கள் தரம் 10 வரை மாத்திரமே கல்வித்தகுதியைக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், 26.7 சதவீதமானவர்கள் மட்டுமே உயர்தரத்திற்கு மேலான கல்வித்தகுதியைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையின் தற்போதைய பணியாளர்களின் தொகை 8.1 மில்லியன் என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 1.3 மில்லியன் பேர் அரச துறை ஊழியர்கள் எனவும், 3.8 மில்லியன் பேர் தனியார்த் துறை ஊழியர்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தரவுகளின்படி, வேலைவாய்ப்பில் ஆண்களின் பங்களிப்பு, பெண்களை விட அதிகமாக உள்ளது.
பொருளாதார ரீதியாக செயலற்ற மக்கள்தொகையில், 27.6 சதவீதமானவர்கள் ஆண்கள் எனவும் 72.4 சதவீதமானவர்கள் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.
இலங்கையில் வேலையின்மை பிரச்சினை, ஆண்களை விட பெண்களிடையே மிகவும் கடுமையானதாக உள்ளது எனவும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
