விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 09 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்
புன்னைநிராவி பகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான மோகனபவன் வனிதா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்தார்.
அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்தார்
