சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுகிறாரா மஹிந்த ராஜபக்ஷ?
கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் 151 வாக்குகளுக்கு ஆதரவாகவும் ஒரு வாக்குக்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் கையொப்பமிட்டவுடன் இந்த நடவடிக்கை சட்டமாக மாறும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம மாவத்தையில் உள்ள வீட்டை பராமரிக்க அதிக அரச நிதி செலவாகுவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டு வாடகை மாத்திரம் 4.6 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் புதிய சட்டத்தின் கீழ் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது
முறையாகக் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தான் வீட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். இருப்பினும் அவரது குடும்பத்தினர் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என்று கண்டித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஏற்கனவே தங்களது தனிப்பட்ட இல்லங்களுக்குத் திரும்பிவிட்டதால் அவர்கள் இந்த பிரச்சினையில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
