இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் கவலைகளை எழுப்ப எந்த காரணமும் இல்லை என ரஷ்யா தெரிவிப்பு

இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் கவலைப்பட வேண்டிய எந்த காரணமும் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கைக்கு பதிலளிக்கும் ரஷ்ய பிரதிநிதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் பரஸ்பர மரியாதைக்குரிய ஒத்துழைப்பை அமைக்க இலங்கை தயாராக உள்ளதாகவும், அண்மையில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை தந்தது அதற்கான தெளிவான உதாரணம் எனவும் ரஷ்ய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார் .

இலங்கை, சர்வதேச மனித உரிமை கடமைகளுக்கு ஏற்ப தேசிய சட்டங்களை திருத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பொது நிர்வாகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய நல்லிணக்கத்தின் நோக்கில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் ரஷ்யா சுட்டிக்காட்டியது.

கடந்த ஓகஸ்டில் புதிய தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் உருவாக்க இலங்கை எடுத்த தீர்மானத்தை ரஷ்யா வரவேற்றதுடன், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் விசேட பணியகங்கள் செயற்படுவதையும் எடுத்துக்காட்டியது.

எனினும், “மனித உரிமைகள்” என்ற பெயரில் இலங்கையின் மீது அரசியல் அழுத்தம் செலுத்தும் முயற்சிகள் கவலைக்குரியவை என ரஷ்யா கண்டனம் தெரிவித்தது.

உள்நாட்டு அதிகாரிகளின் ஒப்புதலின்றி மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அதிகாரம் அளிக்கும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்கள், நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடப்படாது என்ற கொள்கைக்கு முரணானவை என ரஷ்யா தெரிவித்துள்ளது .

எந்தவொரு மீறல்களையும் விசாரித்து நீதிக்கு கொண்டுசெல்லும் உரிமை இலங்கை அதிகாரிகளுக்கே உண்டு என ரஷ்ய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார் .