ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளை வழங்க முடியவில்லை
புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு, வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு முடியவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களாக வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இலக்கத் தகடுகள் கிடைக்கவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மொத்த வாகனங்களில் 127,745 உந்துருளிகளே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 26,894 சிற்றூர்ந்துகள், 5,809 முச்சக்கர வண்டிகள், 1868 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் 2,122 நில வாகனங்கள் (Land Vehicles) என பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், 25,526 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 3,222 மின்சார சிற்றூர்ந்துகள், 5 வேன்கள், 155 முச்சக்கர வண்டிகள் மற்றும் 22,133 உந்துருளிகள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இலக்கத் தகடுகளை அச்சிடுவது நிறுத்தப்பட்டதன் காரணமாக, வாகன இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் வர்த்தக நிலையங்களின் கட்டணங்களும் காலவரையின்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.