படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மூதூரில் கையெழுத்து சேகரிப்பு

-மூதூர் நிருபர்-

செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்று சனிக்கிழமை மூதூர் -மணற்சேனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கையெழுத்து போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டதையும் காண முடிந்தது.

கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் அ.உதயகுமார் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

வடகிழக்கிலே இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டத்தை சகல தமிழ் கட்சிகளும் இணைந்து ஆரம்பித்திருக்கிறோம்.

இலங்கையில் இருக்கின்ற 17 புதைகுழிகளில் மூதூர் -மணற்சேனையும் ஒன்றாகும்.கிட்டத்தட்ட 47 உடலங்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன.இந்த மயானமும் சர்வதேசத்திற்கு சாட்சி சொல்ல கூடிய ஒன்றாகும்.

வடகிழக்கிலே இடம்பெற்ற இனப்படுகொலைக்கு ஐ.நா சபையினுடைய நீதியை கோரி நிற்கின்றோம்.எங்களால் எடுக்கப்படுகின்ற கையெழுத்துக்களை ஐ.நா வின் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு அனுப்பவுள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டதற்கும் இனப்படுகொலைக்கும் உள்ளக பொறி முறையில் நீதி கிடைக்காது என்ற வகையில் நாம் சர்வதேசத்தை வேண்டி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.