கடந்த 07 மாதங்களில் 41 அரச அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, 3937 முறைப்பாடுகளை பெற்றுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, இவற்றில் 1011 முறைப்பாடுகள் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அல்லது அவை லஞ்சச் சட்டத்தின் எல்லைக்குள் வராததால் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டன.
அதே ஏழு மாத காலத்திற்குள், லஞ்ச சம்பவங்கள் தொடர்பான சோதனைகளின் போது, 49 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக, அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
அதன்படி, 15 அரச நிறுவனங்களில், பல்வேறு பதவிகளை வகிக்கும் 41 அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில், பெரும்பாலோர் பொலிஸ் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், 17 பொலிஸ் அதிகாரிகள் தடுப்புகாவலில் எடுக்கப்பட்டனர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களிலிருந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சோதனைகளின் போது, கைது செய்யப்பட்டவர்களைத் தவிர வேறு வகையான விசாரணைகள் மூலம் மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழ வெளியிட்டு எட்டு பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்குவர்.
