இலங்கையில் தமிழருக்கு நீதி இல்லை என்பதை ஜனாதிபதியின் யாழ்.விஜயம் உறுதிப்படுத்தியது – கஜேந்திரகுமார் தெரிவிப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதை குழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற வன்மம் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனித புதைகுழி இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாரிய ஒரு இனப்படுகொலையின் சாட்சியாக விளங்குகிறது.

இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் உண்மையை கண்டறிவது மட்டும் போதும் அவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதை தவிர்க்கும் செயற்பாட்டில் கடந்த அரசாங்கங்களைப் போல் இந்த அரசாங்கமும் செயலபட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர் குற்றங்கள் என்பன தொடர்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தற்போது செம்மணியில் எலும்புக்கூடுகள் 200 ஐ தாண்டிய நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் கோர வடிவமாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகிறது.

யாழ்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அனுர செம்மணியை பார்வையிடாமல் சென்றது பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியின் வடிவமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

70 வருடங்களாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் எதை செய்தார்களோ அவற்றையே ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய ஆட்சியிலும் பின்பற்றி வருகிறது.

இப்படிப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி அனுரகுமாரவுக்கு எம்மில் சிலர் செம்மணி விவகாரத்தில் நீதி நிலைநாட்ட உதவ வேண்டுமென கடிதம் எழுதுவது முட்டாள்தனமான செயற்பாடு என தற்போது விளங்கு இருக்கும்.

ஆகவே சிங்கள ஆட்சியாளர்களால் செம்மணி மட்டுமல்ல தமிழர் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அடுத்து செல்வதே தீர்வுக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.