மட்டு.வந்தாறுமூலை பகுதியில் கோர விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை களுவன்கேணி வீதி, ரயில் கடவையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில், களுவன்கேணி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயமடைந்த நிலையில், பொது மக்களால் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொழில் நிமிர்ந்தம் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையை கடக்க முற்படும் வேளையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரியவருகிறது.

இவ் விபத்து தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்

குறித்த ரயில் கடவையில் இரண்டு நாட்களாக பணியாளர் இல்லாததால், இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் ரயில் கடவை ஊழியர் இல்லாததால், மக்கள் பாதுகாப்பற்ற முறையில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், ரயில் திணைக்களத்தின் அலட்சியப்போக்கே இந்த விபத்துக்கு காரணம் எனவும், தெரிவிக்கின்றனர்.

இந்த இழப்பு மிகவும் வேதனையானது எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.