2026 பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு சீன ஜனாதிபதிக்கு மோடி அழைப்பு

2026 ஆம் ஆண்டு இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குச் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதனை இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சங்காய் மாநாட்டுக்காகச் சீனா சென்றுள்ள பிரதமர் மோடியும், சீன ஜனாதிபதியும் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா விசா திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம், உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சீன ஜனாதிபதியும், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளனர்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் அவர்கள் ஆலோசித்துள்ளனர்.

பயங்கரவாதம், உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பிலும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்நிலையில், இந்திய- சீன எல்லையிலிருந்து இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றதால் அங்கு அமைதி ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி சீன ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியா- சீனா ஆகிய 2 நாடுகளுக்கு இடையேயான உறவு மனிதகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கும். அத்துடன், உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என உறுதி பூண்டுள்ளோம், இருநாட்டு உறவால் 280 கோடி பேருக்குப் பலன் கிடைத்துள்ளது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் சீனாவும், இந்தியாவும் பழம் பெரும் நாகரிகம் கொண்ட நாடுகள் என்றும், உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் எனவும், இந்தியா-சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் ஒன்றிணைவது மிக முக்கியம் என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.