வென்னப்புவ துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபர், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாள் மற்றும் ஒரு காருடன் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

காலை 10.30 மணியளவில் வேவா வீதியில் காரில் வந்த ஒரு குழு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இடித்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் கூர்மையான ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கி, பின்னர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் காயமடைந்தார். நிலுவையில் உள்ள உயர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக வென்னப்புவ காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பி வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் , உயிரிழந்தவருக்கு செப்டம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வரவிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட ஏனையவர்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான கண்டறியவும் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.