மான் வேட்டையில் ஈடுபட்ட ஐவர் கைது

வில்பட்டு தேசிய பூங்காவில் கர்ப்பிணி புள்ளி மானை வேட்டையாடியதாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகஸ்தெனியா பகுதியில் ரோந்து சென்ற வில்பட்டு தேசிய பூங்காவின் குக்குல்கட்டுவ பீட் அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகளால் இவர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கர்ப்பிணி புள்ளி மான் கொல்லப்பட்டு இறைச்சிக்காக தயார் செய்யப்படுவதை வனவிலங்கு அதிகாரிகள் கவனித்தனர்.

ஒரு நபர் வனவிலங்கு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்தாலும், வனவிலங்கு அதிகாரிகள் ஐந்து நபர்களை கைது செய்ததுடன், துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு கத்தி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு மின்சார டார்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சந்தேக நபர்களும் வழக்குப் பொருட்களும் இன்று வியாழக்கிழமை நொச்சியாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

தப்பியோடிய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.