த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
மதுரையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டில் தவெக தலைவர் விஜய்யின் பாதுகாவலர்கள், சரத்குமார் என்பவரைத் தூக்கி கீழே வீசிய முறைப்பாட்டின் அடிப்படையில் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் ரேம்ப் வோக் (Ramp Walk) செல்லும்போது, அவரைச் சந்திக்கும் ஆர்வத்தில் சரத்குமார் என்பவர் ரேம்ப் மீது ஏறியுள்ளார்.
அப்போது அவரைப் பாதுகாவலர்கள் தூக்கி வீசியதாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதில் இளைஞருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபாசமாகப் பேசுதல், தாக்குதல், தூக்கி வீசுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் விஜய்க்கும் அவரின் பாதுகாவலர்களுக்கும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.