ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு
ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 ஒக்டோபரிலும், மெல்போர்ன் நகரத்தில் யூதக் கோயில் மீது கடந்த 2024 டிசம்பரிலும், தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களை, ஈரான் அரசுதான் இயக்கியுள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்களை அவுஸ்திரேலியாவின் புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாக, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுவதாகவும், ஈரானிலுள்ள அவுஸ்திரேலியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
இத்துடன், அவுஸ்திரேலியாவுக்கான ஈரானின் தூதர் அஹமது சதேகி வெளியேற்றப்படுவார் எனவும், ஈரானிலுள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் அனைவரையும் தாயகம் திரும்புமாறும் அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.
ஈரானில் வசிக்கும் அவுஸ்திரேலியர்கள் கைது செய்யப்படலாம் எனவே உடனடியாக வெளியேறுங்கள் என எச்சரித்துள்ளார்.
இதேநேரம் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படைகளை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க பிரதமர் அல்பானீஸ் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
