பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம், நியமிக்கும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்டது
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மாஅதிபருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இது தொடர்பான ஆவணம் இன்று பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பப்பட்டது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முதல் அதற்கு மேலான பதவிகளிலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் அவர்களுக்கான நியமனம் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வசமிருந்தன.
இந்த சூழ்நிலையில், பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் திறமையின்மை தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை பொலிஸ் மாஅதிபரால் உடனடியாக இடமாற்றம் செய்ய முடியாது நிலையால் இது பொலிஸ் நிர்வாகத்துக்கு கடுமையான தடையாக காணப்பட்டது.
இது தொடர்பில் தற்போதைய பொலிஸ் மாஅதிபர், பதில் பொலிஸ் மாஅதிபராக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியு்ளளார்.
இதன் விளைவாக தற்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ் மாஅதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் சரியான காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டாலோ அல்லது பதவியில் இருந்து இடைநீக்கப்பட்டாலோ, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் அதிகாரம் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உள்ளது.
மேன்முறையீடு தொடர்பில் விசாரணை நடத்தி, சரியான காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், ஆணைக்குழுவுக்கு இடமாற்றத்தை சரிசெய்ய வாய்ப்பு உள்ளது என ஆணைக்குழுவின் சிரேஷ்டஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
