ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையே ரணில் செலவிட்டார் – வஜிர அபேவர்தன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பயணத்துக்காக செலவிடப்பட்ட பணம், வரவு -செலவுத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்த பயணத்துக்காக செலவிட்ட பணம், ஜனாதிபதியின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட பணமே என்றும் வேறு ஒதுக்கத்தில் அல்லாத பணம் அல்ல என்றும் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
இந்த செலவுகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் அலுவலகம் கணக்காய்வுகளை மேற்கொண்டது.
இந்த கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் கூட, அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் எந்தவித குறிப்புகளும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
