ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதிகள் நாளை விசேட சந்திப்பை முன்னெடுக்கின்றனர்
தற்போது சிறையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பாக ஏனைய முன்னாள் ஜனாதிபதிகள் நாளை கொழும்பில் விசேட ஊடக சந்திப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது .
கொழும்பில் உள்ள ப்ளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இது தொடர்பாக விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மனோ கணேசன், பி.திகாம்பரம், ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் ருவான் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, சகல ரத்நாயக்க, சுகீஸ்வர பண்டார மற்றும் பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் இதை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை நடைபெறும் ஊடக சந்திப்பில் அவர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றாலும், முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகவும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடப்படுகிறது.
