Breaking : இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான சந்தர்ப்பத்தில் கைதாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது.
அதைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி முன்னாள் ஜனாதிபதியும் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
