‘இலங்கையில் முதலீடு செய்யுங்கள்’ எனும் மகுடத்திலான முதலீட்டாளர் மாநாடு

சிங்கப்பூருடனான இருதரப்புப் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கை கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாடு குறித்தும், இலங்கையில் உலகளாவிய முதலீடுகளுக்கான வாய்ப்பு குறித்தும் தெளிவுபடுத்தும் நோக்கில் ‘இலங்கையில் முதலீடு செய்யுங்கள்’ எனும் மகுடத்திலான முதலீட்டாளர் மாநாடு கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்றது.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையும் இலங்கை பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில் சிரேஷ்ட அரச அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகத்தலைவர்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான இருதரப்புப் பொருளாதாரத் தொடர்புகளை பலப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சி சார்ந்த இலங்கையின் புதிய நோக்கெல்லையைத் தெளிவுபடுத்துவதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் சரியான தருணத்தில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அங்கு உரையாற்றிய சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் செனெரத் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து மாநாட்டில் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நாட்டின் பொருளாதாரமானது கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத வளர்ச்சியுடன் குறிப்பிடத்தக்களவிலான மீட்சியைப் பதிவுசெய்திருப்பதாக எடுத்துரைத்தார்.

அத்தோடு பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், வெளிநாட்டுக்கையிருப்பு 6 பில்லியன் டொலராக உயர்வடைந்திருப்பதாகவும், கடன்மறுசீரமைப்பு செயன்முறை நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.