மண்டூர் மதிதயனின் கொலை சம்பவம் : மீள் விசாரணைக்கு பணிப்புரை!

மண்டூரில் படுகொலை செய்யப்பட்ட மதிதயனின் வழக்கை மீள் விசாரணைக்கு உட்படுத்துமாறு அமைச்சர் ஆனந்த விஜேபால பணிப்புரை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் 2015ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் மதிதயனின் கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை அதற்கான நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது

மண்டூர் மதிதயனின் கொலை சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை செய்து நீதியினை நிலைநாட்டுவதற்கு விசாரணையினை ஆரம்பிக்குமாறு வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்

கடந்த அரசாங்கங்களில் இவ்வாறு பல கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் நாம் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி பூரண விசாரணைகளை மேற்கொண்டு நீதியினை நிலைநாட்டுவதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். பொலிஸ் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. நாம் எந்த பேதமுமின்றி நீதியினையும் சட்ட ஒழுங்குகளையும் நிலைநாட்டுவதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

மண்டூர் மதிதயனின் கொலை சம்பவம்

மட்டக்களப்பு மண்டூரை சேர்ந்த சமூகசேவை உத்தியோத்தர் சச்சிதானந்தம் மதிதயன் (43 வயது) என்பவர் இனந்தெரியாத நபர்களால் அவரது வீட்டில் வைத்து 2015 மே 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகத்தராக கடமையாற்றிய மண்டூர் 1 ஆம் பிரிவில் வசிக்கும் சச்சிதானந்தம் மதிதயன் சுகவீனமுற்று சத்திரசிகிச்சை மேற்கொண்டு சுகவீன விடுமுறையில் தனது வீட்டில் இருந்த போது அவரைச் சந்திக்க வருபவர்கள் போன்று இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அவருடன் உரையாடுவது போல் நடித்து அவரை திடீரென சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்

படுகாயமடைந்த சச்சிதானந்தம் மதிதயன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.