மோசடி ஸ்டாராக மாறிய பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..

சதுரங்கவேட்டை படத்தைப் பார்த்த பலருக்கும் இருந்த கேள்வி, ஒருத்தன் எப்படி இத்தனை பேரை ஏமாற்றினான் என்பதாக இருக்கலாம்.

ஆனால் அதில் ஊருக்கு ஒரு பெயர், தொழிலுக்கு ஒரு ஏமாற்று வழி என கதாநாயகன் நட்டியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் பவர் ஸ்டார் விஷயத்தில் நடப்பது ஒரே விஷயம் தான். ஆனால் அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ஏமாறுபவர்கள் குறித்த தகவல்களும், அதன் பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்படுவதும், நடவடிக்கைகள் மேற்கொள்வதும் தொடர்ந்து ஒரு சுழல் போல நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
அப்படியான ஒரு சம்பவம்தான் மீண்டும் நடைபெற்றுள்ளது.

ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி டெல்லி தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி பெற்று மோசடி செய்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட மற்றும் போக்குவரத்து செலவுக்காக பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. பவர் ஸ்டார் சீனிவாசன் மீது அதேபோல் ஆறு மோசடி வழக்கு சென்னையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.