இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்க முடியாது : தவிசாளர் திட்டவட்டம்!
-யாழ் நிருபர்-
அம்பன் பிரதேசமானது கடந்தகாலத்தில் முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்து செல்லும் அபாயத்தில் உள்ளதால் இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது என்றும் வழங்கிய மணலை மீள பயன்படுத்துமாறு பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் நல்லூர் ஆலயத்திற்கு மணல் மண் வழங்குவதற்கு எதிரானவர்கள் அல்ல. கடந்தகால முறையற்ற மணல் அகழ்வினால் கொட்டோடை கிராமத்தில் உருவான பாரிய சூழல் பாதிப்பு காரணமாகவே மக்கள் நல்லூரான் ஆலயத்திற்கு மணல் மண் வழங்க மறுத்ததுள்ளனர் என்றார்.
இதேவேளை அம்பன் கொட்டோடை வீதியை பயன்படுத்துவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியபோது,
எமது சபைக்கு சொந்தமான வீதி மணல் மண் ஏற்றிச் சென்றால் சேதமடையும் போது அதற்கான இழப்பீட்டை பெறுவதற்க்காகவே தான் அனுமதி கொடுத்ததாகவும், மணல் மண் ஏற்றுவதற்கு தான் எதிரானவன் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த அம்பன் கொட்டோடை வீதியானது கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரதேச சபையால் தடைசெய்யப்பட்ட வீதி என்பது குறிப்பிடத்தக்கது.