பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான பகுதியில் கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் உட்பட நால்வர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி பகுதியைச் சேர்ந்த 21இ 26 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் 38 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பெண் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, மேலும் மூன்று சந்தேக நபர்கள் நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.