கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் வழிப்பறி கொள்ளை தொடர்பில் கைது

கொழும்பின் பல பகுதிகளில் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாணந்துறையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சந்தேக நபர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து விடுமுறைக்காகத் திரும்பியிருந்தார், மற்றவர் பாணந்துறையைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

பொலிசார் சுமார் 15 ஸ்மார்ட்போன்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை மீட்டனர் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போலி எண் தகடுகள் கொண்ட மோட்டார் சைக்கிள், இரண்டு முழு முகக்கவசங்கள், இரண்டு கைப்பைகள் மற்றும் 10,900 மில்லிகிராம் ஹெராயின் ஆகியவற்றையும் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் ஹெராயினுக்கு மிகவும் அடிமையாகி, ஒரு நாளைக்கு 20 பாக்கெட்டுகள் வரை உட்கொள்வதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் கொள்ளைச் சம்பவங்களைச் செய்து வந்ததாக விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.

போகுந்தரையில் சிறப்பு பொலிஸ் நடவடிக்கையின் போது, அதிகாரிகள் சமிக்ஞை செய்தபோது நிறுத்தத் தவறியதால், அவர்கள் பிடிபட்டனர்.
பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரல்ல, அதுருகிரிய, தலங்கம, மற்றும் பிலியந்தல உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து இந்த இருவரும் கொள்ளையடித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட கைப்பைகளை போல்கொட ஆறு மற்றும் தொலைதூர காட்டுப் பகுதிகளில் வீசி பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் சென்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

திருடப்பட்ட சில தொலைபேசிகள் பிரிக்கப்பட்டு மொரட்டுவையில் உள்ள ஒரு மொபைல் போன் கடைக்கு பாகங்களாக விற்கப்பட்டன. மில்லியனரின் வீட்டில் ஒரு படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

25 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் மேலதிக விசாரணைகளை பொலிசார் நடந்தி வருகின்றனர்.