விரைவில் புதிய பிரதம நீதியரசர் நியமனம்!
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ எதிர்வரும் 27 ஆம் திகதி 65 வயதை எட்டியவுடன் ஓய்வு பெறவுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் அவர் பிரியாவிடை உரை நிகழ்த்தவுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறையில் சேவையாற்றிய நீதியரசர் முர்து பெர்னாண்டோ, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி, இலங்கையின் 48வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
இவர், நாட்டின் இரண்டாவது பெண் பிரதம நீதியரசருமாவார்.
இதனிடையே, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அரசியலமைப்பு பேரவைக்கு நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக நியமிக்கப்படக் கூடியவரின் பெயரை எதிர்வரும் வாரத்தில் பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது.
சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவுக்கு அடுத்தபடியாகவுள்ள உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசராவார்.
இதற்கிடையில், ஓய்வுபெறும் பிரதம நீதியரசர், உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள வெற்றிடத்தை நிரப்ப, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ரத்னபிரிய குருசிங்கவின் பெயரை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.