திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின் வெளியீடும், கலைக்கேசரி விருது வழங்கும் நிகழ்வும்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் அவர்களின் ‘தூரத்து விண்மீனை கண்டேன்’, ‘விழிகளில் ஒரு வானவில்’ ஆகிய இருநூல்கள் நேற்றையதினம் சனிக்கிழமை வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வு, திருகோணமலை மாநகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 03.00 மணியளவில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திருகோணமலை மாநகராட்சி மன்றத்தின் மேயர் க.செல்வராஜா (சுப்ரா), சிறப்பு விருந்தினராக திருகோணமலை தமிழ் சங்கத்தின் தலைவர் மூத்த எழுத்தாளர் திருமலை நவம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
இந்நிகழ்வில், விசேட உரையை வாசல் வாசகர் வட்டத்தின் செயலாளர் , ஊடகவியலாளர் சரவணபவானந்தம் திருச்செந்தூரன் நிகழ்த்தினார்.
நூல்களுக்கான மதிப்பீட்டுரைகளை கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன், கவிஞர் க.யோகானந்தம், கவிஞர் யோ.புரட்சி ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில், சிரேஷ்ட கலை, இலக்கியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல வருட காலம் சேவையாற்றிய சிவஸ்ரீ அ.அரசரெத்தினம், பி.ரி.அஸீஸ், வே.சரவணபவ ஆனந்தம், விக்கி நவரட்ணம், ப.மதிபாலசிங்கம் ஆகியோர் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.