காணியை அபகரிக்க வேண்டாமென தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டம் கன்னியா – பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை, அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்கள் காணி எங்களுக்கு வேண்டும் என கோசங்களை எழுப்பினர், வீடு காணி இல்லாமல் நாங்கள் திருமணம் செய்து ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் இருக்கிறோம், இவ்வாறான நிலையில் காணியை வேறு நபர்களுக்கு ஏன் வழங்க வேண்டும், இதனை நிறுத்த வேண்டும், என குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.