
கடற்தொழில் அமைச்சர் இன்னும் போதிய தெளிவை பெறவில்லை – இம்ரான் எம்.பி
மீன் பிடி விடயங்கள் தொடர்பான நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வில், கடற்தொழில் அமைச்சரிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எழுப்பிய கேள்விக்கு கடற்றொழில் அமைச்சரின் பதில் திருப்தியில்லை என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்
ஆனால் இந்த கேள்விகளுக்கு அமைச்சர் வழங்கிய பதில்களில் இருந்து சுருக்கு வலை தொடர்பாகவும் NIGHT DIVING தொடர்பாகவும் அமைச்சர் இன்னும் போதிய தெளிவு ஒன்றை பெறவில்லை என்பதே தெரிகிறது.
இது தொடர்பாக கௌரவ மீன்பிடி அமைச்சரை நாம் தொடர்ந்தும் தெளிவூட்ட வேண்டும்.
1986 ஆம் ஆண்டு சுருக்கு வலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின்படி 3/8 (0.375) அங்குல கண் அளவுக்கு மேற்பட்ட சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் வழங்கப்படலாம் என உள்ளது.
ஆகவே வர்த்தமானி அறிவித்தலின் படி 3/8 அங்குலத்துக்கு மேற்பட்ட கண் உள்ள வலைகள் அனைத்த்தும் சட்டரீதியான வலைகள்.
ஆனால் வடக்கு கிழக்கில் 3/8 அங்குலத்துக்கு மேற்பட்ட வலைகள் அதாவது சட்டரீதியான வலைகள் சட்டவிரோத வலைகள் என கைது செய்யப்படுகின்றன.ஆனால் இதே வலைகள்காலி மாத்தறை கடற்கரையில் இருக்கிறது.
அதை கைது செய்யவும் யாருமில்லை தடை செய்யவும் யாருமில்லை
இப்பொழுது அமைச்சர் சென்றால்கூட காலி மாத்தறை கடற்கரையில் சுருக்கு வலையை காணலாம்.சுருக்கு வலை தொடர்பாக வடகிழக்கில் ஒரு சட்டம் தெற்கில் வேறு ஒரு சட்டம் உள்ளதா?
ஆகவே அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலை எது தடை செய்யப்பட்ட சுருக்கு வலை எது என அமைச்சர் சபைக்கு தெளிவு படுத்த முடியுமா ?
வடக்கு கிழக்கில் கைது செய்யப்படும் வலைகள் தடை செய்யப்பட்ட வலைகள் எனின் 1986 ஆம் ஆண்டு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 3/8 அங்குலம் என்பதை திருத்த முடியுமா?
Night Diving செய்து மீன்பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது 2019 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பத்திரம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணத்தை அமைச்சர் சபைக்கு தெளிவுபடுத்த முடியுமா?
அத்துடன் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தரும் அட்டைகளை இரவில் மட்டுமே பிடிக்க முடியும் என்பதால் அட்டைகளை பிடிக்கும் அனுமதியை மட்டும் மீண்டும் வழங்க முடியுமா என்பதையும் இது தொடர்பாக NARA நிறுவனம் ஏதாவது வழிகாடடல்களை வழங்கியுள்ளதா என்பதை அமைச்சர் சபைக்கு தெளிவுபடுத்த முடியுமா?, என கேள்வி எழுப்பியுள்ளார்.
