மட்டு.வாகரையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி கருவம்பஞ்சோலை குளத்தில் மீன்பிடித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 11 வயதான 2 சிறுமிகளும் மற்றும் 10 வயதான ஒரு சிறுவனும் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவர்கள் கருவம்பஞ்சோலை குளத்தில் மீன் பிடித்து விட்டு திரும்புகையில் குளத்தில் இருந்த குழியில் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட பின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குளத்தில் ஆழமான குழிகள் தோண்டப்பட்டதாகவும், அவை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு இவை தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்த அப்பகுதி மக்கள், இந்த சிறுவர்களின் உயிரிழப்புக்கு பொறுப்பற்ற அதிகாரிகளே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.